22 ஆகஸ்ட் 2010

எதனால் எழுதவேண்டும்?

எதனால் எழுதவேண்டும்? எனதும் உங்களதும் எண்ண அலைகள் ஏன் பரிவுபட வேண்டும்? மூளையோ- மனதோ, மலரும் சிந்தனைகளை எழுத்தாக்கி எறியும் மனிதர்களின் உளவியல் தேவை தான் என்ன? வித்தியாசங்களை விதைத்து, தனித்துவங்களை அறுவடை செய்வதில் அப்படி என்ன ஆர்வம் வேண்டியிருக்கிறது? சிப்ஸ் மெமோரி, சிலிக்கன் புரட்சி, பைனரி உலகம்... என்ற வேகப் புதுமைகளுக்குள், சொற்களை அடுக்கி உங்களையும், என்னையும் சூடேற்ற (அல்லது குளிர்வேற்ற) வைக்கும் சூட்சும சக்தி எது?? நீங்களும் நானும், எழுதாவிட்டலோ, வாசிக்கப்படாவிட்டலோ, இந்த உலகின் காற்றும், கடலும் இல்லாமல் போய்விடுமா என்ன? எழுதி கிழிப்பதில் மரணித்துப்போன மனித நிமிடங்களின் "ஆக்கப்பெறுமதி" பற்றி யாரும் ஆராய்வதாக தெரியவில்லை. விளைவுகள் பற்றிய கவலை இல்லாது விவசாயம் செய்யும் தோட்டக்காரர்களை எழுத்து வயலில் மட்டும் தான் சந்திக்க முடியும், இதில் "புரோடுக்டிவிட்டி " எங்கே இருக்கிறது என்று யாரும் மதிப்பீடு செய்வதில்லை. "பலன்களையும்" "விளைவுகளையும்" புறந்தள்ளிவிட்டு உழைக்கும் ஒன்றுக்கும் உதவாதோர் பட்டியலை நீட்டுகிறது எழுத்து வெறி. இப்படி, அவதி நிறைந்த உலகிலும் , எழுதுவதற்கும், வாசிப்பதற்குமான போதை எந்த அட்கொகோலினால் ஏற்ப்பட்டுப்போயுள்ளது? இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளின் வரிசையில் இப்போது நானும்! இருந்ததும், இது நிறுத்தப்படமுடியாத நதியாக உள்ளது. சேரும் கடலை பற்றி கவலைப்படாது, ஜாலியாகவே அனுபவித்து நகரும் நதியாக இருப்பது குழந்தைமை உணர்வை மீட்டு எடுப்பதாக உள்ளது. அது எதனிலும் மேவிய வரம் என்ற முடிவோடு என் தமிழ் பதிவு பயணம் (ஆங்கிலத்திலான தொழில் சார் பதிவு சில வருடங்களாக தொடரும் நிலையில்) இன்று ஆரம்பமாகிறது.

இறுதியாக, ஏன் எழுத வேண்டியாகியுள்ளது? இது போதை அல்ல. உணர்வுள்ள உயிரிகளின் அடிப்படை தேவை. பகிர்வு என்பது இவர்களுக்கு சுவாசத்துடன், சமாந்தரமாகிப் போயுள்ளது.

எழுத்து தவம்
எழுத்து தியானம்
எழுத்து, அழுத்த சக்தியை இயக்க சக்தியாக்கும் பொறி
முற்றுப்புள்ளிகளை, கொம ஆக்கும் ஏற்பாடு,
எழுத்து அஞ்சல் ஓட்டம்,
அவர்கள் தந்துள்ளனர், நாம் ஓடியாகவேண்டியுள்ளது.
எழுத்து நின்மதி,
எல்லா உணவும் உண்டபின், இறுதியாக அருந்தும் தண்ணீர்!
இங்கு...
அறுவடைகளை விட, விதைப்புக்களே முக்கியமாகியுள்ளது!!