29 மே 2011

பூக்களாய் மலர்ந்த மனசும்... புதையலாய் வந்த மலரும்…


என் இதயத்துள் மலர்களையும்…
மனசுக்குள்
பனித்துளிகளையும்….
புரவிவிட்டு
ஏன்னை
மேகத்துக்குள்
ஆழைத்துச்சென்ற
மேகலையே,


நான்
பாலைவனமாய்
கிடந்த போது– என்னில்
மலர்ச்செடிகளை
நட்டாய்!
உன் பார்வையின் ஒளியில்
நான்
ஒளித்தொகுப்பு செய்தேன்,
உன் ஈரமான புன்னகையில் - நான்
ஒட்சிசனும் தண்ணீரும்
பெற்றேன்,
பாலைவனமாய்
கிடந்த நான்
இன்று
நந்தவனமாகிவிட்டதாய்
நினைக்கிறேன்
எல்லாமே…
உன்னால்!


இந்தப் பாறை
உறைந்துதான் இருந்தது....
உன்
பார்வை மின்னல்
என்மேல்
படும்வரை மட்டும்!


நீ தந்த அதிர்வுகளால்
என்னுள்ளும்…..
நெகிழ்வுகள்;
எல்லாம்
எதிர்பார்த்திராதவை தோழி!!


இந்த மூங்கில்
புல்லாங்குழல் ஆகுமென்று
யார் நினைத்தது?


அன்று
நீ
தென்றலாய் வந்து
மோதிய போதுதான்
உணர்ந்தேன்;
அடடா
எனக்குள்ளும் இசை!


வியர்த்துக்கொண்டிருந்த
வெப்பப் பொழுதுகளில்
விசிறியாக வந்த
தென்றல் பெண்ணே!
உனக்குத் தெரியுமா
உன்னை மட்டும்
சுவாசித்துக்கொண்டிருப்பதில்
என்
மூக்குக்கு மட்டும்
எவ்வளவு
மோகமென்று!

உன்னோடு
தொடங்கிய பயணம்
ஒற்றை விமானத்தில்
உலகம் சுற்றியதை விட
உணர்ச்சி மிக்கது

எந்தச் செலவுமில்லாது
செவ்வாய்க்கு
சென்று வந்தவன்
நான் மட்டும் தான்!
உன் நாடியின் மேலிருக்குமே…
அந்த செவ்வாய்க்கு!


இப்போதெல்லாம்
என் மனசு
வைகாசி காலத்து
மரங்களைப் போல
மகிழ்வுடனேயே இருக்கிறது
எல்லாமே…
உன்
வரவால்தான்!


எனக்குள்
வாழ்ந்த கனவுகளுக்கு
உருவங் கொடுத்தவள்
நீ மட்டும்தான்!

எனக்குள்
வாழ்ந்த
உணர்வுகளுக்கு
உறவு கொடுத்தவளும்
நீ மட்டும்தான்!

ஆதலால்தான்…
கரையை விரும்பும்
அலைகளாய் எப்போதும்…
ஓடிவந்துகொண்டிருக்கிறது
என் மனசு.. உன்னிடம்!


உன்னை ஏன் - எனக்கு
பிடித்ததென்று கேட்டாய்
தெரியவில்லை!
மனசுக்கு மட்டும்
காரணம் தெரியும்
அது சொல்லும்
வார்த்தைகளை
மொழிபெயர்க்க
இன்னும் - என் வாய்
வயதுக்கு வரவில்லை
தோழி!

அமெரிக்க கோபுரங்கள்
அடிபட்டதைப்போல்
எல்லாம் எதிர்பாராமலேயே
முடிந்துவிட்டது
இருந்தும்
இங்கு…
இழப்புக்களால்
சந்தோசம்தான்!


நான்
கைதுசெய்யப்பட்டால்
தற்கொலை செய்தது – என்
கவலைகள் மட்டுமே!



என்
ஆப்கானிஸ்தான் நண்பன் நஷரி
எழுதித்தந்த
உன் பெயரை போல்
நீ
கதைக்கையில்
உன் முகத்தில் ஏற்படும்
வளைவு நெளிவுகளை
பார்ப்பதில்தான்
எனக்குப் பிரியம் அதிகம்

மாரிகாலத்து
மலரிதழ்
காலையில்
பனியைப் போர்த்திக்கொண்டு
படுத்திருப்பது போல்…
என் மனசும்
உன் நினைவுகளை
போர்த்தியபடி
நித்திரை செய்வதில்தான்
எவ்வளவு சுகம்?
அறிவும்…
உணர்வும்…
செய்துதந்த
எதிர்பார்ப்பை
விழித்தூண்டிலில்
மாட்டிவிட்டு
காத்திருந்தேன்
வசமாக வந்து
மாட்டிக்கொண்டாய்,
இன்று…
எனக்குள்ளே நீ!

உன் கைகளை பார்;
உள்ளம் கைகளை,
அதில் தெரிவது
வெறும் கோடுகளல்ல
உன்னைத் தேடி
நான் அலைந்த பாதைகள்

உன் கண்ணின் மேலே
கைகளை வைத்துப் பார்
ஒற்றைப் பாதை
நிதானமாய்ச் செல்கிறது
அது எது தெரியுமா?
உன்னை சந்தித்தபின்
நான் நிதானமாய்
நடந்து வந்த நெடுஞ்சாலை

இந்த நதி
தனக்கான
பாதையை
தெரிந்துவிட்டதால்
இனி இங்கே
(நீர்) வீழ்ச்சிகளுக்கு
சாத்தியமில்லை!


உன்
கண் சிமிட்டல்களையும்
புன்னகைப் பொழுதின்
புரவச நினைவுகளையும்
மட்டும்
என்
நுரையீரல்
சுவாசிக்க விரும்புவதால்
நீ….
எப்போதும் வேண்டும்
என்னருகில்!

இப்போது…
கொஞ்சம் சிரி
உன்
ஈரப்புன்னகையில்
என்
இதயம்
தாகம் தீர்க்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக