29 ஜூன் 2014

திசைகள் தொலையாத திருப்பங்கள் வேண்டும்

வளைவுகளின் அடுத்த பக்கத்தில், இயற்கை எதை எழுதி வைத்துள்ளதென்பதை எதிர்வு கூறும் வல்லமை எப்போது வரும்? 

இது, நண்பனின்  வலி நிறைந்தவோர் திருப்பம்பற்றி அறிந்துகொண்ட நாள். விடைகளே அற்ற கேள்விகளை, வாழ்க்கை தன் பாதையின் இடையில் பெரிய தடைகளாய்ப் போட்டு வைத்துள்ளது. எந்தப் பயணமும் இதுவரை நேர்கோட்டில் நிகழ்ந்ததில்லை என்றபோதும், எதிர்பார்க்க முடியாத வளைவுகளில் வாழ்க்கையின் மறு பகுதியை தரிசிக்கும் போது மனது கனக்கிறது.

திருப்பங்களின் மறுகோடியில் விருப்பங்களேயற்ற வலிகள் காத்திருந்தாலும், திசைகளைத் தொலைக்காத அவர்களின் பயணத்திற்காய் பிரார்த்திக்கத் தோன்றுகிறது!!

06 ஏப்ரல் 2014

"மலர்வின்" மொழி

இது பொலனறுவையின் ஒரு காலைப்பொழுதில், சூரியன் கண் விழித்துக்கொண்டிருக்கும் போது கைப்பற்றியது.

நான் இரவின் மனிதன். அதிகாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத எனக்கு, இந்தநாள் மலர்வின் மொழியை அதன் எல்லா அர்த்தத்துடனும் போதித்துப்போனது. 

சலிப்பே இல்லாது, தன் பிறப்பை, தினமும், ஏராளமான கொண்டாட்டங்களுடன் தொடங்கும் காலைப் பொழுதுகள், தவிர்க்கப்பட முடியாதவை. 

எழுத முடியா நிறங்களுடன் புறப்படும் சூரியனை, எல்லா மரமும், புல்லும், பறவைகளும், நீர் நிலைகளும், மேகங்களும் தங்களுக்கே உரிய மொழியில் மகிழ்ச்சி பேசி அழைக்கும் கணங்கள் அற்புதம். புதிய புதிய இடங்களில், ஒரு நாளின் பிறப்பைத் தரிசிப்பதென்பது, வேறுபட்ட வலிகளுக்கான ஒரே மருந்தென முன்மொழிய முடிகிறது. 


இந்த மலர்வின் மொழி - எல்லோருக்குமான நேர் சிந்தனையின் சாவியாக உள்ளது. காயங்களின் கதவுகளைத் திறந்து ஒளி நோக்கிச்செல்லும் உந்துதலைத் தருகிறது. இனி நம் 'காலைகளைக்' கொஞ்சம் கவனித்துக்கொள்வோம். மலர்வின் சக்தி பற்றிச் சிந்திக்கத் தூண்டிய இந்நாளுக்கு என் நன்றிகள்.

மகிழ்ச்சியின் எழுத்து

உயிர், மெய், ஆயுத எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தெது


முதன்மையாயும், தனித்துவமாயும் முன் மொழியப்பட்ட எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது என் தனிப்பட்ட உணர்வின் பிரதிபலிப்பு மட்டுமே. என் மகிழ்ச்சியின் எழுத்துக்கள் எல்லாம் 'உயிர்மெய்'க் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். இணைவில் பிறந்த எழுத்துக்கள் எல்லாம் எதோ ஒரு இசையை தங்களுள் பாடிக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு.

இணைவின் முடிச்சுக்களில் தெரியும் மகிழ்ச்சியின் தடங்கள், இரண்டினது உறவையும் பேசிக்கொண்டுள்ளன. ஒளியினதும், மொட்டுக்களதும் இணைவு, மலர்களைப் பரிசளித்துள்ளன. விதைகளுடனான- நிலத்தின் இணைவு, மரங்களை பரிசளித்துள்ளன. பூமி பிரிவுகளின் படைப்பால் ஆனதல்ல, இணைவுகளின் வலிமையால் ஆனது. இருந்தும், இங்கு, இணைவுகட்கான வாய்ப்புக்களை விட, பிரிவுகட்கான வாய்ப்புக்கள் வலிமை பெறுவதாய் ஒரு உணர்வு. உணர்வு மட்டுமே!

'
முதன்மைகளை' நிறுவும் முயற்சியில் 'இணைவுகள்' இல்லாது ஒழிக்கப்படும் நிலைமைகள் கவலையானவை. எதோ ஒன்றுக்குரிய போட்டிகளில் மனிதர்கள் தீவுகளாவதை இரசிக்க முடியவில்லை. பிள்ளைகள், தங்களை வார்க்கும் அச்சுக்கள் கூட இங்கு 'போட்டிகள்' எனும் மூலகத்தாலேயே ஆக்கப்பட்டுள்ளது. தனியன்களின் வீரியங்களே இங்கு போற்றுதற்குரிய பொருளாகியுள்ளது.

அலைகள் அற்ற கடலும், கரைகள் அற்ற அலைகளும் மகிழ்ச்சியின் வடிவமாய்த் தோன்றவில்லை. கடல்களைத் தரிசிக்க வரும் மனிதர்களாலும், சூரியனாலும் கடற்கரைகள் மேலதிக மகிழ்ச்சியைப் பேசுகின்றன. ஒவ்வொரு இணைவுகளின் நிமிடத்திலும் பூமி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாய் ஓர் உணர்வு.

இருக்கும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, இன்னும் இன்னும் உயிர்மெய் எழுத்துக்களை உற்பத்தி செய்வோம். இணைவுகளின் வயலில், மகிழ்ச்சியின் பூக்களைத் தரிசிப்போம்

புரிதல்

 
                                                                  
நீ
உயரத்தில் இருப்பதாய்
இங்கு பேசிக்கொள்கிறார்கள்.
வானம் உன் 
வசப்பட்டதாய் உலாவும் கதைகளில்..
பொசிந்து கொண்டிருக்கிறது, போதையின் துளிகள்.

நீ
வெற்றியின் அடையாளம் ஆகியிருப்பதை
நானும் நம்பியிருந்தேன்,
அன்றொரு நாள்..
நீ
உன் சகபாடிகளை இழந்தவோர்
தனிமைச் சுடலையில்
தவமிருப்பதாய் கூறும் வரை!

24 மார்ச் 2014

கட்டு

நீங்கள் இளநீருக்கான தாகத்தில் இருப்பதாய்ச் சொன்னீர்கள், 
நாங்கள் எங்களைக் கட்டிவைக்க சம்மதிக்க, 
அவர்கள் உங்களுக்காய் மரம் ஏறினார்கள்.
நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, 
பறித்த இளநீர் முழுக்க பருகி இரசித்தீர்கள்,
உங்கள் இளநீருக்காய்,
மீண்டும் மீண்டும் இரையான பொச்சுக்கள்
எங்கள் அருகிலேயே கட்டிவைக்கப்பட்டன.
நாங்கள் எல்லோரையும் உயர்த்தும் ஏணிகள் என்று முருக்கேற்றினார்கள்,
ஏறியவர்களும், பருகியவர்களும் போய்விட - இன்னும் கட்டுக்கள் அவிழாமல் நாங்கள்!

03 அக்டோபர் 2013

நிறங்கள்.

நிறங்களின் கொண்டாட்டத்தில்
நனைகிறது நினைவுகள். 
இதயம் இளகுமெனில்.. 
கண்கள் கைதாவதைப்பற்றி கவலையில்லை!

02 அக்டோபர் 2013

திணிக்கப்பட்ட போட்டிகளும், திசை இழந்த பறவைகளும்!

வெற்றிகளுக்கான எங்கள் திருவிழாக்களில், காணமல் போயுள்ள ஆரோ சிலரின் "நம்பிக்கைகள்" பற்றி சிந்திக்க தோண்றுகிறது. எதிர்பார்ப்புகளும், போட்டிகளும்  ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்துள்ள பாதையில், பாரிய குழிகளாய் நிறைந்துள்ளன  நம்பிக்கையினங்கள். தவறி வீழ்ந்தோர் பற்றி எந்த கரிசனையும் இல்லாது, "உலக வழமைகள்" வழக்கம் போலவே, ஓட வந்தோரை மீண்டும் மீண்டும் தனது திசை நோக்கி உந்தி தள்ளியபடி உள்ளது. சிறுவர் பராயத்தில் திணிக்கப்பட்ட போட்டிகளால், திசை இழந்த பறவைகளாக வாழும் நண்பர்கள் ஏராளம். இவர்களின் இன்றைய வாழ்வே, அடுத்த தலைமுறைகளை வழிநடத்துவதற்கான செய்தி. இருந்தும், சந்ததிகள் கடந்து, கையளிக்கப்பட்ட அதே அச்சில், இன்னும் எமக்கான சிலைகளை தயாரிக்கும் முயற்சியில் நாம்.  எங்கள் கைகளில் அவர்களில் ஆரோ சிலரின் நம்பிக்கைகளும் உள்ளதாக நம்புவோம்!

12 நவம்பர் 2012

தீ தெறிக்கும் பொறி


தீயன தீயில், தீய்ந்து தேய்ந்திடும் 
தீபநாள் இன்றென  நம்புவோம்!
தீயதை கொய்திடும் கொழுந்து தீ அது 
நெஞ்சினில் உள்ளதாய்  கொள்ளுவோம்!! 

கேடை,  கடவுளார் கொய்தபின் - இன்னமும் 
கெட்டவர் வாழ்கிறார்  கண்டுகொள்!
நரபலி கொண்ட  நம் சூரரை - கோவிலுள் 
கடவுளார் விட்டதேன்? என்றுசொல்!

நல்லதை எண்ணி எம், நாட்களை கடத்த இப் 
பண்டிகை பலன் தரும் உண்மையே, - பெரும் 
தீமையை எரிக்குமத் தீயினை தெறிக்க நம் 
முயற்சி தான் பொறி தரும் முன்னையே !

10 பிப்ரவரி 2012

"இருள்"களுக்கான பரிந்துரை


இருள்- எதிர் மறைகளின் குறியீடாகவே கற்ப்பிக்கப்பட்டுள்ளது. கறுப்பைக் கட்டிக்கொண்ட இருள், பயத்தின் அடையாளமாய், விருப்பத்திற்க்குரியத்தில் இருந்து அன்னியப்படுத்தப்படுள்ளது. இருளின் ஒலிகள் காதில் கிலியை நுழைக்கும்  சாத்தானின் பேச்சாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கண்கள் கறுப்புக்கு மேல் ’இருளை’ படிக்க முயலாததனால் இருளின் வரைவிலக்கணம் வெறும் கறுப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுள்ளது. 'கறுப்பின் வல்லமை’ பற்றிய வரலாற்று மறைப்பும், மறை மொழிபெயர்ப்பும் இருள் பற்றிய புரிந்துகொள்ளலை இயலாமைக்குட்படுத்தியுள்ளது. கறுப்பின் “நிஜம்” பற்றிய புரியாமை, இருளின் புரிதலை இல்லாமலாக்கிவிட்டது. இருளின் பின்னால்  கேட்கும் ஒலிகளே இருளின் ஒலிகளாக காது கற்பிதம் செய்து வைத்துள்ளது. இருள் தன்னை நியாயப்படுத்த ஒருபோதும் முற்படாததனால், மனிதன் தன் ஆயுளின் அரைவாசியை அதனுடன் கழித்தாலும் கூட, இருளை விரோதிதுக்கொண்டே இறந்து போகின்றான்.

இருள் பற்றிய எம் புலக்காட்சிக்கு இருள் பொறுப்பல்ல என்று கற்றுக்கொள்வதற்கு "வெளிச்சம் "  எமக்கு வாய்ப்பைக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் காட்டுவது போலக் காட்டி  "சரிகளை" மறைக்கும் "வெளிச்சங்கள்" பற்றி பேசுவது, வெளிச்சத்துக்கு செய்யும் துரோகம் என்ற குற்ற உணர்வு வேறு. இவ்வாறான குற்ற உணர்வுகட்கான மூலம், நம் கற்பித்தல் முறைகளின் அறுவடைகளில் ஒன்று.  இருளின் படைப்புக்களை எல்லாம் ஒளி வெளிச்சம் போட்டு விற்பனை செய்யும். உழைக்கும் வர்க்கம் போல், உழைப்பின் பலன் இழந்த இருள், ஒளியின் அனுபவிப்பைப்பார்த்து மெளனமாய்க் கண் மூடும். இருளுக்காய் வழக்காடப் புறப்பட்ட ஒருசில மின்மினிகளையும் பகலின் வெளிச்சம் மீண்டும் மீண்டும் கொல்லும்.

இருள் நிஜம், பகல் சூரியன் வழங்கிய கடன். கடனாளியை விட, இல்லாதவன் பலவான். பகல்ஆக்கத்தில் பங்கெடுப்பது உண்மை எனினும், ஆரோக்கியத்தை திருடிக்கொள்கிறது. பகல் வெள்ளையைக் கட்டிக்கொண்டு திருடர்களை மறைத்து வைத்துள்ளது. நிகழ்ச்சிகள் வெளிச்சத்தில் நடந்தாலும், வளர்ச்சி இரவில் தான். இது வெளிச்சத்துக்கெதிரான வழக்காடல் அல்ல. தப்பான கற்பிதங்களுடன் மெளனித்து இறந்து கொண்டிருக்கும் "இருளுக்கான" பரிந்துரை. இங்கு “இருள்” என்பது வெறும் இருள் மட்டுமல்ல, அதன் பிரதிகளாய் சஞ்சரிக்கும் எல்லாமும் தான்.