01 ஜனவரி 2012

முதல் நிமிடங்களின் போதனை

"வாழ்தல்" வெறும் பெறுமானங்களுக்கு அப்பால் இன்னும் நிறையாத வெளியில் நகர்வதாகவே உணரமுடிகிறது. இந்த நிறைவின்மையை தோல்வியின் கணக்கு பக்கங்களில் கூட்டி வருட மீதியை நம் தேறிய சோகமாக சமப்படுத்த முயலும் உளநிலை, மனித இயங்குதலை இறுக்கத்திற்குள்ளக்குகிறது. உண்மையில் மனித ஓட்டம்; உடல், உள, சமூக, ஆத்மிக தேவைகள் நோக்கிய புலத்தில் செலுத்தபடுகிறது. நிறைவேறிய தேவைகளின் தளத்தில் இருந்து நிறைவேறா தேவைகளின் தளம் நோக்கிய  இந்த பாச்சல், புவிஈர்ப்பை போல இயல்பானதே.  


இருந்துகொண்டே இருக்கும் நிறையா- வெளியை காந்த புலமாக உணர்ந்து சலிப்பற்று "நிரப்புதல்களை" மேற்கொள்வோரின் வாழ்தலை "வெற்றி" கொண்டவர்களாக கருதுவர் மற்றவர்கள். நிரப்பப்படும் வேகத்தில் நிரம்புதல்களுக்கான வெளிகளும் உருவாகிக்கொள்கின்றன என்ற தனி அனுபவத்தை ஏனோ பொதுமைப்படுத்த மனம் முயல்வதில்லை. நிரம்பிய வெளிகளின் கனதியை நிரம்பா வெளிகளின் கனதி விழுங்கிக்கொள்ளும் இயல்பான உள இயக்கம்; மனதில் மறை உணர்வுகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுகிறது, இது மனதுக்குரிய மனிதனை மட்டும் தூக்கத்துக்குள் தள்ளி விடுகிறது. புகை வண்டியின் ஓட்டத்துடனேயே அருகில் உருவாகி செல்லும் வெற்றிடம் அண்மையில் உள்ளவற்றை இழுத்துவிடும் மறை சக்தியை தன்னிடத்தில் வைத்துள்ளதாக பெளதிகம் கூறும். ஆக இயங்குதலும் அதற்கு சமாந்தரமான வெற்றிடமும், ஈர்ப்பும், விளைவும் வாழ்தலின் வரை நீளும் என்ற உண்மை எதற்கும், எவருக்கும், எந்த பயணத்திற்கும் பொருந்தும் என்று இந்த வருடத்தின் முதல் நிமிடங்கள் எனக்கு போதிப்பதாக படுகிறது. இந்த நிறையாத வெளியும், அதன் நியாயமான ஈர்ப்பும் மனதில் மறை எண்ணங்களை விதைப்பதற்கு பதில், நேர் சிந்தனையும் யதார்த்த உடன்பாடுகளையும் ஏற்படுத்தும் கருவியை தன் அருகில் கொண்டிருத்தல் என்பதே எவரதும் வரம். சிலர் இதனை கடவுள் என கொள்வர், எனக்கு இது அருகில் உள்ள குழந்தைகளும் நல்ல மனிதர்களும், அடிக்கடி ஏற்படும் பயணங்களுமே ஆகும். 


முடிந்த, இதோ கடந்த வருடத்தின் இதே கணங்களில், இங்கே நான் எழுதியதை போலே, "ஒவ்வொரு பிறப்பிலும் ஏரமான நம்பிக்கைகளும், நேர் சிந்தனைகளுமாக 'இயங்குதல்' புதுப்பிக்கப்படுகிறது". இது வெறும் கொப்புகளுடன் உள்ள மரங்கள், மீண்டும் பருவகாலத்தில் இலைகளை உடுத்துக்கொள்வது போல், வருடப்பிறப்புகள் மனிதர்களில் நம்பிக்கைகளை அரும்புகின்றன. இந்த சோடிக்கப்பட்ட நாட்கள், வாழ்தலை கொண்டாட தூண்டும் உட்சாகத்தை தருகிறது. ஆதலினால் வெற்றிடங்களை "வெறுமைகள்" என்று கற்பிதம் கொள்ளது, எம் இயங்குதலுக்கான தூண்டலாக ஏற்போம். இன்றைய வாழ்தலை கொண்டாடும் கணங்களால், நேற்று வரை நிரப்பாமலே வைத்துள்ள வெளிகளை மூடிக்கொள்வோம். (புகைப்படம் : 'வாழ்தலை' கொண்டாடுவதற்காக தொலை தூரம் இருந்து புலம் பெயர்ந்து  யாழ் வந்த பறவைகள்:  யாழ் - பண்ணை வீதியில்)
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக