18 பிப்ரவரி 2025

எம்மைக் கண்டெடுப்போம்

 எல்லோரும் கலைத்துக்கொண்டோடும் எல்லாமும் காணமல் போன நாள் ஒன்றில், எம்மைக் கண்டெடுப்பதற்கான கணம் ஒன்று கிடைக்கும்.

4.5 பில்லியன் ஆண்டுகளாய் வாழும் பூமியின் ஏதோ ஒரு படிமம் எம்மைப் பார்த்து புன்னகைக்கும். இங்கே நீளமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலவும், காற்றும், நதியும், செடியும் எமக்குள் புதைந்து போய்க்கிடந்த மகிழ்ச்சியின் மேல் படைகளை உரசும்.

இயற்கையின் உறவு எம் அத்தனை அணுக்களையும் அணைக்கும் கணத்தில் நாம் மீண்டும் ஒரு முறை பிறந்திருப்போம்.

இப்போது சாகா வரம் பெற்ற மகிழ்ச்சியின் கரங்களில் நிஜமான நாமாக நிறைந்திருப்போம்.




12 ஜனவரி 2025

தரிப்பு!

 தரிப்பு!

நிறத்தை மாற்றியது வானமே தான். மனதில் மட்டுமேன் மகிழ்ச்சி? காலை, நீலமாய் இருந்த இந்த நீள வானில், மஞ்சளைப் பூசியது சூரியன் அல்லவா? இருந்தும், தொலை தூரத்தில், தொடர்பே இல்லாமல் அலைந்து கொண்டிருந்த மனதில் மகிழ்ச்சியை
உருக்கியது எது?
தரிப்பு!
ஓட்டத்தின் நடுவே, புலன்களுக்கு ஓய்வு கொடுக்கக் கிடைத்த ஒரே ஒரு கணம் அத்தனை மாறுதல்களையும் மலர விட்டுள்ளது. அதன் கீழ், அரும்பத்தொடங்கிய இரசனை, நம்பிக்கை, ஆதரவு, வாழ்வின் அர்த்தம் என அத்தனையும் சேர்த்து சிந்தனைகளையும், உணர்வுகளையும் உற்சாக பாத்திரத்தில் வைத்து பரிசளித்துள்ளது.
உலர்ந்து போன ஓவ்வொரு பொழுதுகளுக்கும் அடுத்ததாய் ஒரு மஞ்சள் மாலை இருக்கும். வானம் மலரும், ஆதலினால்.. மனமும் மகிழ்ந்தே தீரும். அதுவரை.. அடுத்த உயிர்ப்புக்கு இடையில், இந்த வானம் என்னை எல்லோருக்கும் கூறச் சொல்லிய ஒற்றை வார்த்தை
தரிப்பு!

04 ஜூன் 2020

மழை பெய்த நாள்


செடிக்கும் - நீருக்கும், நீருக்கும் -வானுக்கும், வானுக்கும்-செடிக்குமாய் இணைந்து போய்க்கிடக்கும் உறவின் பிரதியை அதே ஈரத்துடன் அறிமுகப்படுத்திய நாள் இது. 

மண்ணின் தாகத்தை அதில் அமரும் மனிதர்கள் புரியாவிடினும், மழை புரியும். 
மண்ணின் தனிமையும், வெறுமையும், பொறுமையும் மழையின் ஒற்றைத்தூறலில் மரணிக்கும். 

வரட்சியே தன் வாழ்வெனக் காய்ந்து போய்க்கிடக்கும் மண்ணில், ஏதோ ஓரு நாள் பெய்யும் மழை பச்சையைப் பரிசளிக்கும். கடந்து போன புள்ளினங்களும், புல்லினங்களும் ஒரே இரவில் மீண்டும் வந்து மண்ணின் மகத்துவத்தைப்பாடும். மண்ணின் நீண்ட காலத் தவத்தின் வரம், ஒரே நாளில் வந்தடையும் அந்த மழையின் உறவே.    

மண்ணைப்போல் இங்கே காத்திருக்கும் மனிதர்களுக்கு அவர்களின்  "மழையைத்" தரிசிக்கும் நாளே வரம். வற்றிப்போய்க்கிடக்கும் எல்லாச் செழிப்பையும் வாழ்வில் அறிமுகப்படுத்தும் அந்த மழை எல்லோரின் மீதும் ஏதோ ஒரு நாள் பொழிய வேண்டும். அது இருபது வருடங்களின் முன், எனக்கு இதே நாளில் பொழிந்தது. இன்னும் நனைந்து கொண்டே தான் இருக்கிறேன்.  

Photo I T.Mayuran I Jaffna I 2012 


















29 ஜூன் 2014

திசைகள் தொலையாத திருப்பங்கள் வேண்டும்

Photo I T.Mayuran I Kandy I 2013
வளைவுகளின் அடுத்த பக்கத்தில், இயற்கை எதை எழுதி வைத்துள்ளதென்பதை எதிர்வு கூறும் வல்லமை எப்போது வரும்? 

இது, நண்பனின்  வலி நிறைந்தவோர் திருப்பம்பற்றி அறிந்துகொண்ட நாள். விடைகளே அற்ற கேள்விகளை, வாழ்க்கை தன் பாதையின் இடையில் பெரிய தடைகளாய்ப் போட்டு வைத்துள்ளது. எந்தப் பயணமும் இதுவரை நேர்கோட்டில் நிகழ்ந்ததில்லை என்றபோதும், எதிர்பார்க்க முடியாத வளைவுகளில் வாழ்க்கையின் மறு பகுதியை தரிசிக்கும் போது மனது கனக்கிறது.

திருப்பங்களின் மறுகோடியில் விருப்பங்களேயற்ற வலிகள் காத்திருந்தாலும், திசைகளைத் தொலைக்காத அவர்களின் பயணத்திற்காய் பிரார்த்திக்கத் தோன்றுகிறது!!

22 மே 2014

நெருப்பெரிந்த நிலத்தின் பூக்கள்

மண்ணின் தேவதைகள்
மௌனத்தைப் பேசிக்கொண்டிருக்கையில்..
அவை,
'மாலை' க்கான ஆசையில்
மலர்ந்து கிடக்கிறதென
மொழி பெயர்த்துகொண்டிருப்போரே..
புரிந்துகொள்ளுங்கள்...
மலைகளுக்குள் மட்டுமல்ல
இங்கு
பூக்களுக்குள்ளும்
பூகம்பமுண்டு.
இவை,
நெருப்பெரிந்த நிலத்தில்
புதையுண்ட,
விதையிலிருந்தேறி
வந்த பூக்கள்!

26 ஏப்ரல் 2014

விடுதலை


----------------
சீக்கிரம் மகிழ்ந்து முடியுங்கள்,
உங்கள் எல்லையற்ற
மகிழ்ச்சிப் பொழுதுகளின் முடிவில்,
மண்டியிட்டுக் கிடக்கிறது எங்கள் சுதந்திரம்.
Photo I T Mayuran I 2014 I Dehiwala 

06 ஏப்ரல் 2014

"மலர்வின்" மொழி

                       Photo I T.Mayuran I polonnaruwa I 2012 



இது பொலனறுவையின் ஒரு காலைப்பொழுதில், சூரியன் கண் விழித்துக்கொண்டிருக்கும் போது கைப்பற்றியது.
நான் இரவின் மனிதன். அதிகாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத எனக்கு, இந்தநாள் மலர்வின் மொழியை அதன் எல்லா அர்த்தத்துடனும் போதித்துப்போனது. 
சலிப்பே இல்லாது, தன் பிறப்பை, தினமும், ஏராளமான கொண்டாட்டங்களுடன் தொடங்கும் காலைப் பொழுதுகள், தவிர்க்கப்பட முடியாதவை. 

எழுத முடியா நிறங்களுடன் புறப்படும் சூரியனை, எல்லா மரமும், புல்லும், பறவைகளும், நீர் நிலைகளும், மேகங்களும் தங்களுக்கே உரிய மொழியில் மகிழ்ச்சி பேசி அழைக்கும் கணங்கள் அற்புதம். புதிய புதிய இடங்களில், ஒரு நாளின் பிறப்பைத் தரிசிப்பதென்பது, வேறுபட்ட வலிகளுக்கான ஒரே மருந்தென முன்மொழிய முடிகிறது. 


இந்த மலர்வின் மொழி - எல்லோருக்குமான நேர் சிந்தனையின் சாவியாக உள்ளது. காயங்களின் கதவுகளைத் திறந்து ஒளி நோக்கிச்செல்லும் உந்துதலைத் தருகிறது. இனி நம் 'காலைகளைக்' கொஞ்சம் கவனித்துக்கொள்வோம். மலர்வின் சக்தி பற்றிச் சிந்திக்கத் தூண்டிய இந்நாளுக்கு என் நன்றிகள்.

மகிழ்ச்சியின் எழுத்து

உயிர், மெய், ஆயுத எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தெது


முதன்மையாயும், தனித்துவமாயும் முன் மொழியப்பட்ட எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது என் தனிப்பட்ட உணர்வின் பிரதிபலிப்பு மட்டுமே. என் மகிழ்ச்சியின் எழுத்துக்கள் எல்லாம் 'உயிர்மெய்'க் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். இணைவில் பிறந்த எழுத்துக்கள் எல்லாம் எதோ ஒரு இசையை தங்களுள் பாடிக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு.

இணைவின் முடிச்சுக்களில் தெரியும் மகிழ்ச்சியின் தடங்கள், இரண்டினது உறவையும் பேசிக்கொண்டுள்ளன. ஒளியினதும், மொட்டுக்களதும் இணைவு, மலர்களைப் பரிசளித்துள்ளன. விதைகளுடனான- நிலத்தின் இணைவு, மரங்களை பரிசளித்துள்ளன. பூமி பிரிவுகளின் படைப்பால் ஆனதல்ல, இணைவுகளின் வலிமையால் ஆனது. இருந்தும், இங்கு, இணைவுகட்கான வாய்ப்புக்களை விட, பிரிவுகட்கான வாய்ப்புக்கள் வலிமை பெறுவதாய் ஒரு உணர்வு. உணர்வு மட்டுமே!

'
முதன்மைகளை' நிறுவும் முயற்சியில் 'இணைவுகள்' இல்லாது ஒழிக்கப்படும் நிலைமைகள் கவலையானவை. எதோ ஒன்றுக்குரிய போட்டிகளில் மனிதர்கள் தீவுகளாவதை இரசிக்க முடியவில்லை. பிள்ளைகள், தங்களை வார்க்கும் அச்சுக்கள் கூட இங்கு 'போட்டிகள்' எனும் மூலகத்தாலேயே ஆக்கப்பட்டுள்ளது. தனியன்களின் வீரியங்களே இங்கு போற்றுதற்குரிய பொருளாகியுள்ளது.

அலைகள் அற்ற கடலும், கரைகள் அற்ற அலைகளும் மகிழ்ச்சியின் வடிவமாய்த் தோன்றவில்லை. கடல்களைத் தரிசிக்க வரும் மனிதர்களாலும், சூரியனாலும் கடற்கரைகள் மேலதிக மகிழ்ச்சியைப் பேசுகின்றன. ஒவ்வொரு இணைவுகளின் நிமிடத்திலும் பூமி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாய் ஓர் உணர்வு.

இருக்கும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, இன்னும் இன்னும் உயிர்மெய் எழுத்துக்களை உற்பத்தி செய்வோம். இணைவுகளின் வயலில், மகிழ்ச்சியின் பூக்களைத் தரிசிப்போம்

புரிதல்

                                                                  
Photo I T.Mayuran I Jaffna I 2012 

நீ
உயரத்தில் இருப்பதாய்
இங்கு பேசிக்கொள்கிறார்கள்.
வானம் உன் 
வசப்பட்டதாய் உலாவும் கதைகளில்..
பொசிந்து கொண்டிருக்கிறது, போதையின் துளிகள்.

நீ
வெற்றியின் அடையாளம் ஆகியிருப்பதை
நானும் நம்பியிருந்தேன்,
அன்றொரு நாள்..
நீ
உன் சகபாடிகளை இழந்தவோர்
தனிமைச் சுடலையில்
தவமிருப்பதாய் கூறும் வரை!