22 டிசம்பர் 2010

உலகம(மா)யமாதல்

என்னை நினைவிருக்கிறதா?
நீங்கள்...
சுமைப்படும் போதும்,


சுகப்படும் போதும் -என்னில்
பகிர்ந்து கொட்டிய
எண்ணங்கள் பற்றி
எனக்குத்தான் தெரியும்!

உங்கள் ஆதங்கங்களை -என்
வாயில் திணித்துவிட்டு செல்வீர்கள்,
செரிமானம் ஆகாத வலியில் - நான்
திறக்க வரும்
தபால் காரனுக்காக
தவமிருந்த காலங்கள் - உங்கள்
பிரசவ நாட்களை விட
பெறுமதியானவை!

வெளிநாட்டில்,
உறவுகளை உதிர்த்து விட்டு...
என்னிடம் வந்து,
மடல்களை அல்ல - மனங்களை அல்லவா
நிரப்பி சென்றனர்!
தம்பள பூசசியாய் -என்னை
தடவிச்செல்லும்
காதலர்களை பற்றி
என்ன சொல்ல?
அடிக்கடி இடம் பெயரும்
ஈழ தமிழர் போல் - அவர்கள்
இதயம் பெயர்ந்த கதைகளும்
எனக்கு தெரியும்!

உங்கள் உணர்வுகளை காவ
ஒற்றை காலில்
தவமிருந்த எனக்கு - இப்போ
இணையம் என்ற இயமன்
ஈமெயிலிலும், பேஸ் புக் இலும்
பாசக் கயிறு எறியும்
பாவம் பற்றி - எங்கு
பேச?

விரிந்த வலைக்குள்
விழுந்து விழுந்து
"அளவுங்கள்" -ஒருநாள்
உங்கள் அன் கொன்ஸெஸ்,
சப் கொன்ஸெஸ், எல்லாம்
தவணை முறையில்
சந்தைப்படும் போது
என்னை நினைத்து
அழுவுங்கள்!!

--ஆற்றாமையால் அழக் கண்ட
மண்டைதீவு தபால் பெட்டி --

1 கருத்து:

  1. பேசாப்பொருளை கவிஞன் பேசவைத்தால், நெஞ்சம் ஒருமுறை மௌனமாக கதறும் என்பது உண்மை தானே இங்கே!

    பதிலளிநீக்கு